அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது
அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
துவரங்குறிச்சியை அடுத்த அக்கியம்பட்டி அருகே உள்ள சீகம்பட்டியில் கன்னிமார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துக்குட்பட்ட இந்த கோவிலுக்கு சுமார் 6 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. அந்த நிலத்தை இரு வேறு சமூகத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், துவரங்குறிச்சி போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சென்றனர். அப்போது, அக்கியம்பட்டியை சேர்ந்த வெள்ளைக்குட்டி, சரவணன், துரைசாமி, மெய்யன், அய்யாசாமி ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தரக்குறைவாக அதிகாரிகளை பேசியத்துடன் அதில் வெள்ளைகுட்டி என்பவர் பெண்கள் பணியில் இருப்பது தெரிந்தும் பணிக்கு வந்த ஒரு பெண் முன் நிர்வாணமாக நின்றாராம். இதனையடுத்து அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நிர்வாணமாக நின்ற வெள்ளைகுட்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.