காரில் மண்எண்ணெய் கடத்தியவர் கைது
பழவூர் அருகே காரில் மண்எண்ணெய் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
வடக்கன்குளம்:
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே ஈத்தங்காடு பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் 7 பிளாஸ்டிக் கேன்களில் 250 லிட்டர் இருப்பது தெரிய வந்தது.
டிரைவாிடம் நடத்திய விசாரணையில், கூட்டப்புளியைச் சேர்ந்த பீட்டர் மகன் அமலன் (வயது 46) என்பது தெரிய வந்தது. அவர் மீன்பிடி படகுகளுக்கு பயன்படுத்தப்படும் மண்எண்ணெய்யை திருட்டுத்தனமாக வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அமலனை கைது செய்த போலீசார், காருடன் மண்எண்ணெய்யையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.