ஆரல்வாய்மொழியில் வீடுகளில் திருடிய ஆசாமி கைது
ஆரல்வாய்மொழியில் வீடுகளில் திருடிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் கரையான்குழி பகுதியில் கடந்த மாதம் ஒரு வீட்டில் மர்ம ஆசாமி புகுந்து கண்காணிப்பு கேமராவை உடைத்து, பொருள்களை திருடி, சூறையாடி சென்றார். அதேபோல் தோவாளை கமல்நகர் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு பூட்டிய வீட்டில் திருட முயற்சி நடந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இதுதொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்த சம்பவங்களில் சுசீந்திரம் ஆனை பாலம் பகுதியை சேர்ந்த சிவா என்ற ஜீவா (வயது45) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று நாகர்கோவில் இருளப்பபுரத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சிவாவை போலீசார் கைது செய்தனர். இவர் ஆரல்வாய்மொழி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இவர் மீது பல போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.