வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி சிக்கினார்


வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி சிக்கினார்
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி போலீசில் சிக்கினார். அவர் 4 மாதங்களுக்கு பிறகு பிடிபட்டார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி போலீசில் சிக்கினார். அவர் 4 மாதங்களுக்கு பிறகு பிடிபட்டார்.

வெடிகுண்டு மிரட்டல்

நீலகிரி மாவட்ட கலெக்டராக அம்ரித் பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி மர்ம ஆசாமி குறுந்தகவல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்திடம், கலெக்டர் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை கொண்டு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து வந்தனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

சிக்கினார்

இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி, தஞ்சை பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு சென்ற ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி குமார் தலைமையிலான போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர், டெல்லியை சேர்ந்த நிதின் சர்மா (வயது 40) என்பதும், செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் என்பதும், அதுபோன்ற திருட்டு செல்போன் மூலம் பலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்ததோடு, ஊட்டி கலெக்டருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்தது. எனினும் அவர் தொடர்ந்து தனது பெயரை மாற்றி, மாற்றி கூறி வருகிறார்.

இதனால் அவருக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story