பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
எருது விடும் விழாவில் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டையை அடுத்த கல்நார்சம்பட்டி பகுதியில் கடந்த 12-ந்் தேதி எருது விடும்விழா நடைபெற்றது. அப்போது கல்நார்சம்பட்டியை சேர்ந்த சிலர் எருது விடும் விழா நேரத்தை கூடுதலாக வழங்கக் கோரி நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பணியில் இருந்த தோப்பலகுண்டா பகுதியைச் சேர்ந்த கிராம உதவியாளர் வரதராஜ பெருமாள் (வயது 34) என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதனால் கல்நார்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், கோணி, விஜயகுமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கிராம உதவியாளர் வரதராஜ பெருமாளை தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் தாக்கி, காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த கிராம உதவியாளர் வரதராஜ பெருமாளை சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் நேற்று கிராம உதவியாளர் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார், அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, விஜயகுமாரை (வயது 25) என்பவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.