ஐப்பசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: நெல்லையப்பர் -காந்திமதி அம்பாளுக்கு திருக்கல்யாணம்
ஐப்பசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நெல்லையப்பர் -காந்திமதி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நெல்லையப்பர் -காந்திமதி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி திருவிழா
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலில் தவம் இருந்த காந்திமதி அம்பாளுக்கு, நெல்லையப்பர் காட்சி கொடுத்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
திருக்கல்யாணம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று அதிகாலை நடைபெற்றது. இதற்காக கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து நெல்லையப்பர் தங்க பல்லக்கில் மாப்பிள்ளை கோலத்தில் அம்பாள் சன்னதிக்கு பஞ்ச வாத்தியங்கள் மற்றும் மேள, தாளங்கள் முழங்க எழுந்தருளினார்.
அங்கு நெல்லையப்பரை, நெல்லை கோவிந்தர் ஆயிரங்கால் மண்டபம் முன்பு வரவேற்று அவருக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் மணக்கோலத்தில் காந்திமதி அம்பாள் அருகில் நெல்லையப்பர் எழுந்தருளினார். பிரம்ம முகூர்த்தத்தில் சுவாமி-அம்பாளுக்கு மாலை மாற்றப்பட்டு, திருமாங்கல்யம் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாளுக்கு திருமண சடங்குகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஊஞ்சல் உற்சவம்
காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டினபிரவேசம் சென்றனர். மேலும் 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.