குழாய் உடைந்து தெருவில் ஆறாக ஓடிய தண்ணீர்


குழாய் உடைந்து தெருவில் ஆறாக ஓடிய தண்ணீர்
x

நெல்லை டவுனில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் தெருவில் ஆறாக ஓடியது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் பகுதியில் வழுக்கோடையில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலும் வாறுகால் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக வழுக்கோடையில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலமாக வாறுகால் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டது. அப்போது சில இடங்களில் குடிநீர் திட்டப்பணிக்காக போடப்பட்டிருந்த குழாய்களில் நேற்று அதிகாலை உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெளியேறிய குடிநீர், வாறுகால் முழுவதுமாக நிரம்பி சாலையில் ஆறாக ஓடியது. தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து குடிநீர் வினியோகத்தை நிறுத்தி உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் நெல்லை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது. தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து உடைப்பை சரிசெய்தனர். மேலும் பாளையங்கோட்டை, கொக்கிரகுளம் உள்ளிட்ட பல இடங்களில் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதற்கிடையே நெல்லை சந்திப்பு உடையார்பட்டி, மேகலிங்கபுரம், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் போதுமான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே குழாய் உடைப்பு ஏற்படாமல் மாநகராட்சி அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story