பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

ஆனி திருவிழா

நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். 48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 1-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் நெல்லையப்பா் கோவில் வடக்கு திசையில் அமைந்துள்ள பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. புண்யாக வாசனம், கும்ப பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. கொடிப்பட்டத்துக்கு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள், பால் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

பக்தர்கள் தரிசனம்

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து விநாயகர் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் நெல்லையப்பர் கோவில் கொடியேற்றம் மற்றும் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறுகிறது.


Next Story