எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்க பார்க்கிறது -சசிகலா பேச்சு
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்க பார்க்கிறது -சசிகலா பேச்சு.
ஆத்தூர்,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று சேலம் மாவட்டம், ஆத்தூருக்கு சென்றார். பழைய பஸ் நிலையம் முன்பு கூடியிருந்த கூட்டத்தினர் இடையே வேனில் இருந்தபடி சசிகலா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் எந்த முதல்-அமைச்சரும் கொண்டு வராத திட்டங்களான தொட்டில் குழந்தை திட்டம், அம்மா உணவகம், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார். இருபெரும் தலைவர்களான எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை தற்போதைய தி.மு.க. அரசு முடக்க பார்க்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு கட்சி இரண்டாக பிளவுபட்டபோது கூட கட்சியை ஒன்று சேர்த்தது நான்தான். இன்றைய சூழ்நிலையில் கட்சியை ஒன்றிணைப்பது பெரிய விஷயம் அல்ல. ஒற்றுமையுடன் பணியாற்றி மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.