குளத்தில் மண்டி கிடக்கும் செடி, கொடிகளை தூர்வார வேண்டும்
திருக்கடையூர் அருகே மடப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய சாவடியில் உள்ள பெரிய சாவடி குளத்தில் மண்டிகிடக்கும் பால கொடி செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே மடப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய சாவடியில் உள்ள பெரிய சாவடி குளத்தில் மண்டிகிடக்கும் பால கொடி செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியசாவடி குளம்
மயிலாடுதுறை மாவட்டம் மடப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய சாவடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மயிலாடுதுறை செல்லும் சாலை ஓரத்தில் பெரிய சாவடி குளம் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குளத்தை குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த குளத்தில் சில ஆண்டுகளாக பால கொடி செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களும், குப்பைகளும் குவிந்து கிடக்கின்றது. இதனால் குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாசடைந்துள்ள இந்த குளத்தில் குளிப்பவர்களுக்கு தோல் நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.
தூர்வார வேண்டும்
இதனால் பெரியசாவடி கிராம மக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நீண்ட தூரத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் குளத்தை தூர்வாரி பல ஆண்டுகளுக்கு மேல் ஆவதாகவும் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பெரிய சாவடி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய சாவடி குளத்தில் ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.