எடப்பாடி பழனிசாமியின் கழுத்தை சுற்றிய நச்சுப்பாம்பு பா.ஜனதா:குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்;முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு


எடப்பாடி பழனிசாமியின் கழுத்தை சுற்றிய நச்சுப்பாம்பு பா.ஜனதா:குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்;முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு
x

எடப்பாடி பழனிசாமியின் கழுத்தில் சுற்றிய நச்சுப்பாம்பு பா.ஜனதா என்றும், குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000 மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

ஈரோடு

எடப்பாடி பழனிசாமியின் கழுத்தில் சுற்றிய நச்சுப்பாம்பு பா.ஜனதா என்றும், குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000 மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

ப.சிதம்பரம் பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் நேற்று ஈரோட்டில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.

அவர், சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசும்போது கூறியதாவது:-

பெண்கள் முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றை காலம் முழுவதும் பிரசாரம் செய்தவர் பெரியார். தமிழர்களின் சுயமரியாதைக்கு ஆதாரமாக இருக்கிறார்.

நச்சுப்பாம்பு

அவர் தி.மு.க.வினருக்கு மட்டும் பாட்டனார் இல்லை. காங்கிரஸ் கட்சியினராகிய எங்களுக்கும் பாட்டனார்தான். எதிர் அணியில் 2 பேர் நாங்கள்தான் அ.தி.மு.க. என்று நின்றிருக்க வேண்டும். அப்படி நிற்பதுதான் நியாயமாக இருக்கும். யார் பெரியவர் என்று மக்கள் முடிவு செய்து இருப்பார்கள்.

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதாவுடன் இருப்பதை, பரமசிவன் கழுத்தில் பாம்பு என்று நினைத்து இருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் கழுத்தில் நச்சுப்பாம்பாக பா.ஜனதா உள்ளது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கவர்னர் தடுக்கிறார்

தமிழ்நாடு வரலாற்று சிறப்பு, பண்பாடு, கலாசாரம் கொண்டது. பெரியார், அண்ணா, காமராஜர் வகுத்துதந்த கொள்கைகளில் சுயமரியாதையுடன் இருக்கிறோம். ஆனால் தமிழ் பண்பாடு, சுயமரியாதை, ஆதிதிராவிடர்கள், பழங்குடி மக்கள் மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், சீர்திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு விரோதமான கட்சி பா.ஜனதா. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் வன்முறை, சமுதாய கலவரங்கள் நடக்கின்றன. அங்கே அமைதி இல்லை. வேலை வாய்ப்புகள் இல்லை, வாழ வழி இல்லை என்றுதான் தொழிலாளர்கள் தமிழ்நாடு நோக்கி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேர்ந்து நிறைவேற்றிய சட்டங்களை நிறைவேற்றாமல் கவர்னர் தடுத்து வைக்கிறார். அவரை நாம் கண்டிக்கிறோம். தமிழர்கள் நலன் காப்பதாக கூறும் எடப்பாடி பழனிசாமி கவர்னரை எதிர்த்து போராட வேண்டாமா?.

உரிமைத்தொகை

கொரோனாவின் முதல் அலையில் ஆட்சியில் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அவர் மக்களின் உயிரை பாதுகாப்பதில் சொதப்பினார். 2-வது அலையின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக சிறப்பாக நிர்வாகம் செய்து கொரோனாவை கட்டுப்படுத்தினார். முதலில் மக்களின் உயிர் முக்கியம் என்று அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடச்செய்தார். அடுத்து வாழ்வாதாரத்தை காப்பாற்ற அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் வழங்கினார். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்று இல்லம்தேடி கல்வி திட்டம் தந்தார். கல்வி இழப்பை சரி செய்தார். 12-ம் வகுப்புடன் பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்திவிடக்கூடாது என்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 தருகிறார். இதெல்லாம் நிறைவேற்றியது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?.

வருகிற மார்ச் மாதம் பெண்களுக்கு சிறப்பு திட்டம், நீங்கள் எதிர்பார்க்கும் (குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000) பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன்.

இவ்வாறு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதா ஜீவன், சிவ.வீ.மெய்யநாதன், சிவசங்கர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆர்.எம்.பழனிசாமி, ஈ.பி.ரவி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story