மாடு திருடியவரை பொறிவைத்து பிடித்த போலீசார்


மாடு திருடியவரை பொறிவைத்து பிடித்த போலீசார்
x

ஆரணி அருகே மாடு திரடியவரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே மாடு திரடியவரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன், குமரவேலு ஆகிய இருவரின் பசு மாடுகளும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடப்பட்டது. இது குறித்து இருவரும் ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்- இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இருவரது பசு மாடுகளும் இராந்தம் கொரட்டூர் கிராமத்தில் சதீஷ் என்பவருடைய வீட்டில் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவர் மினி வேனில் மாடுகளை திருடி ஆங்காங்கே விட்டுவிட்டு வருவதாகவும் அதனை விற்று வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாடுகளை விற்க செல்ல உடனே வரும்படி சுரேசுக்கு போனில் கூறும்படி போலீசார் தெரிவித்தனர். அதன்படி சதீஷ் போன் செய்யவே மாடுகளை ஏற்றிக்கொண்டு விற்க செல்வதற்காக சுரேஷ் மினிவேனை எடுத்துக்கொண்டு வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இவர்களிடமிருந்து 2 பசு மாடுகளையும் மீட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்த போலீசார் பின்னர் மினிவேனை பறிமுதல் செய்து சதீஷ், சுரேஷ் இருவரையும் கைது செய்தனர். பொறி வைத்து பிடித்த 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story