போலீசார் விடிய, விடிய வாகன சோதனை
விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனைச்சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில்அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஏராளமான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த வாகன சோதனை விடிய, விடிய நடைபெற்றது. இதில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்பெக்டர்கள் ஆனந்தன், செல்வராஜ், காமராஜ், வசந்த் மற்றும் போலீஸ்சார் தீவிர சோதனை நடத்தினார்கள்.மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஓட்டுனர் உரிமம், ஆர்.சி. புத்தகம் இல்லாமல் வாகனங்களை இயக்கியது தொடர்பாக 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.