தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை


தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை
x

குடியரசு தினத்தையொட்டி தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

வேலூர்

இந்தியாவின் 74-வது குடியரசு தினவிழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேலூர் கோட்டை கொத்தளத்தில் காலை 8 மணிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தேசிய கொடியேற்றுகிறார். பின்னர் கோட்டையின் முன்பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பங்கேற்று தேசியகொடி ஏற்றுகிறார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை கவுரவித்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

குடியரசு தினவிழாவையொட்டி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில, மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பாகாயம், அரியூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் நேற்று மாலை தீவிர சோதனை செய்தனர். அப்போது விடுதிகளில் தங்கி உள்ள நபர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்றும், அறைகளில் பழைய குற்றவாளிகள், நாச வேலையில் ஈடுபடும் நோக்கில் மர்மநபர்கள் தங்கி உள்ளனரா என்று சோதனையிட்டனர். மேலும் அவர்கள் தங்கியிருப்பதற்கான காரணத்தை விசாரித்தனர்.


Next Story