நகையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்
மயிலாடுதுறையில் சாலையில் தவறவிட்ட நகையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த போலீசார் போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்
குத்தாலம் தாலுகா வானதிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 40). இவர் தனது மனைவியுடன் மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில் கடந்த 2-ந் தேதி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் இருந்த பவுன் சங்கிலி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சுரேஷ்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், சங்கிலி அறுந்து விழுந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சாலையில் நடந்து சென்ற ஒரு நபர் தங்க சஙகிலியை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், நகையை எடுத்துச் சென்றவர் மயிலாடுதுறை கூறைநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (42) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.உடனே ஸ்ரீகாந்த் கீழே கிடந்து எடுத்த சங்கிலியை மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, நகையை சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் உடனிருந்தனர். நகையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ராஜவர்மா ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.