அனுமதியின்றி இயங்கியமதுபானக்கூடத்தில் போலீசார் அதிரடி சோதனைமதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது
அனுமதியின்றி இயங்கிய மதுபானக்கூடத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் ரெயில் நிலையம், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ள நிலையில் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் அனுமதியின்றி டாஸ்மாக் கடையின் அருகே மதுபானக்கூடம் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த மதுபானக்கூடத்தில் நேற்று விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த மதுபானக்கூடத்தில் காலை 10 மணி முதல் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த மதுபானக்கூடத்தில் விற்பனைக்காக வைத்திருந்த நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இதுதொடர்பாக அனுமதியின்றி மதுபானக்கூடம் நடத்தி மதுபாட்டில்களை விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.