வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் போலீசார் கண்காணிக்க வேண்டும்


வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் போலீசார் கண்காணிக்க வேண்டும்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

ஆக்கிரமிப்பு

திருப்பத்தூர் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்பதால் மக்கள் எளிதாக சென்று வர முடியாத நிலை ஏற்படுகிறது. சாலையோரம் உள்ள கடைகளை அகற்ற வேண்டும். பஸ் நிலையம் முழுவதும் ஆக்கிரமிப்பு உள்ளது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை கூட்ரோடு வரை சாலையின் நடுவே தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் அவதிப்படுவதாக புகார் வருகிறது. குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்கள், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய பணியாளர்கள் நீண்ட தொலைவு சென்று சுற்றி வர வேண்டியுள்ளதால் அங்குள்ள தடுப்புகளை சரி செய்ய வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

ஆம்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய நகர பகுதியில் ஆங்காங்கே டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை முறையாக அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதா? என தெரியவில்லை. அனுமதியில்லாத பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். அனுமதியில்லாமல் பேனர் வைத்தால் சம்மந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து அந்த பேனர்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்பதால் மாணவர்களை நல்வழிப்படுத்துவது பெற்றோர் கடமை மட்டும் அல்ல. ஆசிரியர்களின் கடமையும் அதுவே ஆகும். எனவே, பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போதை பொருள் பயன்பாடு குறித்து காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ராமகிருஷ்ணன், காளியப்பன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜா அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story