சாராயம் பதுக்கிய குடிநீர் தொட்டியை நொறுக்கிய போலீசார்
ஒடுகத்தூர் அருகே சாராயம் பதுக்கிய குடிநீர் தொட்டியை போலீசார் அடித்து நொறுக்கியதால் அதிலிருந்து சாராயம் தெருவில் பெருக்கெடுத்து ஓடியது. சாராயம் விற்ற தாய்-மகனை போலீசார் கைது செய்தனர்.
காளைவிடும் விழா
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தில் நேற்று காளைவிடும் விழா நடந்தது. விழாவைக் காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெரியவர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவை தொடங்கி வைப்பதற்காக தாசில்தார் வந்திருந்தார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்குள்ள குறவர் தெருவில் சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விழாவை காண வந்த இளைஞர்கள் ்சாராயத்தை குடித்துவிட்டு பாக்கெட்டுகளை தெருவில் வீசினர். இது குறித்து அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சீனன் என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் பாக்கெட் சாராயம் விற்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
உடைத்து நொறுக்கினர்
அங்கு ெசன்றபோது அந்த வீட்டு மொட்டை மாடியில் உள்ள குடிநீர் தொட்டியில் சுமார் 700 லிட்டருக்கு மேல் சாராயத்தை பதுக்கி பாக்கெட்டில் அடைத்து வைத்து விற்றுக்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து குடிநீர் தொட்டியை அடித்து நொறுக்கினர்.
இதனால் குடிநீர் தொட்டியில் இருந்த சாராயம் தெருவில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.இது தொடர்பாக சீனன் என்பவரது மனைவி ராணி (வயது 50), மகன் சந்தோஷ் (23) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார்பாதுகாப்பு பணியில் இருந்தும் காளை விடும் விழாவில் கள்ளச்சாராய விற்பனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.