அனுமதியின்றி நடத்திய ஜெபக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
அனுமதியின்றி நடத்திய ஜெபக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள சகாயநகர் பகுதியில் இரு வேறு மதத்தைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். சகாயநகர் குன்னுவிளை பகுதியில் ஒருவர் புதிய வீடு ஒன்றை கட்டி ஜெபக்கூட்டம் நடத்தி வந்துள்ளார். பல நாட்கள் அமைதியாக நடத்தி வந்த நிலையில் கடந்த 9-ந்தேதி முதல் வெளியூர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து ஒலிபெருக்கி வைத்து ஜெபக்கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி வைத்து ஜெபக்கூட்டம் நடத்தி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வீட்டு முன் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த வக்கீல் படுவூர் எட்வின் என்ற அருள் எட்வின் ஜெகம் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அனுமதியின்றி ஒலிபெருக்கி வைத்து ஜெபக்கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து ஜெபக்கூட்டத்தை போலீசாா் தடுத்து நிறுத்தினர். மேலும் ஒலிபெருக்கி சாதனங்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.