வடமாநில வாலிபரின் உடலை எடுக்க முடியாமல் போலீசார் தவிப்பு
இறப்பு சான்று அளிக்க டாக்டர் வராததால் திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் இறந்த வடமாநில வாலிபரின் உடலை எடுக்க முடியாமல் போலீசார் தவித்தனர்.
திண்டுக்கல் ரெயில்நிலைய முதலாவது நடைமேடையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த ராமகிருஷ்ண லாலுபால் (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து வாலிபரின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க ரெயில்வே போலீசார் முடிவு செய்தனர்.
ஆனால் உடல் ரெயில்வே நடைமேடையில் கிடப்பதால் ரெயில்வே டாக்டர் சான்றளிக்க வேண்டும். இதற்காக ரெயில்வே மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் வருகைக்காக, ரெயில்வே நடைமேடையிலேயே போலீசார் காத்திருந்தனர். ஆனால் சம்பவம் நடந்து 3½ மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் ரெயில்வே டாக்டர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு வரவில்லை.
ரெயில்வே நிர்வாகமும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வடமாநில வாலிபரின் உடலை எடுக்க முடியாமல் போலீசார் தவித்தனர். ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் திண்டுக்கல் ரெயில் நிலைய நடைமேடையில் பலமணி நேரம் இறந்தவரின் உடல் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.