தாயை கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர்


தாயை கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர்
x

தாயை கேபிள் வயரால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுலன். இவரது மனைவி வாணிஸ்வரி (வயது53). இவர்களது மகன்கள் ராஜேஷ் மற்றும் தினேஷ் (33). இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டில் ஒரே நேரத்தில் போலீஸ்காரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தினேஷ் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையில் நன்னடத்தை சரியில்லாததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டார்.

குடிப்பழக்கம்

தினேஷ் மனைவி பிரியங்கா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் சொந்த ஊரான சக்கரமல்லூரில் வசித்து வந்துள்ளனர். வாணிஸ்வரியும் அவர்களுடன் வசித்து வந்தார்.

தினேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் எதிரொலியாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரியங்கா ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட்டில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

கழுத்தை இறுக்கி கொலை

இந்த நிலையில், நேற்று வாணிஸ்வரி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக ஆற்காடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நேற்று குடிபோதையில் இருந்த தினேஷ் தனது தாய் வானிஸ்வரியிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். ஆனால் பணம் கொடுக்காததால் அவர் தாய் என்று கூட பாராமல் வாணிஸ்வரியை அவர் கேபிள் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தினேசை கைதுசெய்தனர்.


Next Story