மகனுக்கு சரியாக முடி வெட்டவில்லை என்று கூறி சலூன் கடைக்கு பூட்டு போட முயன்ற போலீஸ்காரர்
மகனுக்கு சரியாக முடி வெட்டவில்லை என்று கூறி சலூன் கடைக்கு பூட்டுப்போட முயன்ற போலீஸ்காரரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் நேவிஸ் பிரிட்டோ. இவரது மகன் தலைமுடியை வெட்டுவதற்காக ஒரு சலூன் கடைக்கு சென்றார். அங்கு முடியை வெட்டிவிட்டு வீட்டிற்கு வந்தார்.
ஆனால் சலூன் கடைக்காரர் முடியை சரியாக வெட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நேவிஸ் பிரிட்டோ தனது மகன், மனைவியை அழைத்துக் கொண்டு சலூன் கடைக்கு சென்றார்.
பூட்டுப்போட முயற்சி
ஆனால் அங்கு கடைக்காரர் இல்லை. இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டு நேவிஸ் பிரிட்டோ அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் கடையில் ஷட்டரை இழுத்து மூடி பூட்டுப்போட முயன்றார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக சலூன் கடைக்காரர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆயுதப்படைக்கு மாற்றம்
இதையடுத்து வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மீனாட்சிநாதன் பரிந்துரையின் பேரில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் நேவிஸ் பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.