கடலூரில் போலீஸ்காரரின் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
கடலூரில் போலீஸ்காரரின் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் செம்மண்டலம் குண்டுசாலையில் வசிப்பவர் முத்துக்குமரன் (வயது 43). இவர் கடலூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் முத்துக்குமரனின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அவரது வீட்டை சுற்றிலும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதற்கிடையே திடீரென எழுந்த முத்துக்குமரன், கார் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இருப்பினும் கார் முற்றிலும் சேதமடைந்தது. காரின் ஒயரை எலி கடித்ததால் தான், தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.