ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பறிக்க வேண்டும்


ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பறிக்க வேண்டும்
x

கை.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பறிக்கக்கோரி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனா்.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். வேப்பந்தட்டை ஒன்றியம், கை.களத்தூர் கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வகுமார் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் 6 பேர் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனா். அதில், கை.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்தின் வளர்ச்சிக்கு எந்தவித முயற்சியும் இதுவரை எடுக்காமல் இருக்கிறார். ஊராட்சியின் நிதியில் எவ்வித வேலையும் செய்யாமல் அவர் போலியான பில் வைத்து பணம் எடுப்பதில் குறியாக இருக்கிறார்.

துணைத்தலைவரை மாற்ற முயற்சி

இதற்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வகுமார் தடையாக இருப்பதால், அவரை மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறார். ஏற்கனவே ஊராட்சி மன்ற சட்ட விதியின்படி எங்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரத்தை ரத்து செய்து 4 மாதங்கள் ஆகிறது. இதனால் ஊராட்சி மன்ற துணைத்தலைவரை மாற்றுவதற்கு நாளை (புதன்கிழமை) வார்டு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் நடத்த தலைவர் முடிவு செய்துள்ளார். இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. செல்வகுமாரே தொடர்ந்து துணைத்தலைவராக பதவி வகிக்க வேண்டும். பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தலைவரின் பதவியை ஊராட்சி மன்ற சட்ட விதியின்படி பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை நடைபெறும் கூட்டத்தை கண்காணிக்க அரசு அதிகாரியையும், பாதுகாப்பிற்கு போலீசாரையும் அனுப்பி வைக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

சாலை மறியலில் ஈடுபட முடிவு

பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க.வினர் கொடுத்த மனுவில், வேப்பந்தட்டை தாலுகா, ரஞ்சன்குடியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டு செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை சிலர் ஆக்கிரமித்து பட்டா பெற்று, பத்திரம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலுக்கு செல்வதற்கு பாதை இல்லாமல் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவிலுக்கு செல்ல பாதை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வழிபாட்டு மக்களான 30 கிராம பக்தர்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம், என்று கூறியிருந்தனர்.

மொத்தம் 256 மனுக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 256 மனுக்களை கலெக்டர் கற்பகம் பெற்றார். மேலும் அவர் 17 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 647 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் கணபதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story