டெம்போ உரசியதில் மின் கம்பி அறுந்து விழுந்தது
நாகர்கோவில் வடசேரியில் டெம்போ உரசியதில் மின் கம்பி அறுந்து ஸ்கூட்டரில் விழுந்தது. அப்போது ஸ்கூட்டரில் இருந்து தாய்- மகன் குதித்ததால் உயிர் தப்பினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரியில் டெம்போ உரசியதில் மின் கம்பி அறுந்து ஸ்கூட்டரில் விழுந்தது. அப்போது ஸ்கூட்டரில் இருந்து தாய்- மகன் குதித்ததால் உயிர் தப்பினர்.
அறுந்து விழுந்த மின் கம்பி
நாகர்கோவில் அருகே புத்தேரியில் இருந்து வடசேரி நோக்கி நேற்று காலை ஒரு டெம்போ வந்தது. எஸ்.எம்.ஆர்.வி. சந்திப்பு அருகே வரும்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக டெம்போ சாலையோரமாக சென்றது. அப்போது டெம்போவின் மேல் பகுதி அங்குள்ள உயரழுத்த மின் கம்பி மீது உரசியது. இதனால் மின் கம்பி அறுந்து ரோட்டில் டெம்போவின் பின்னால் வந்த ஸ்கூட்டர் மீது விழுந்தது. அந்த ஸ்கூட்டரில் தாயும், மகனும் வந்தனர்.
இந்த நிலையில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீப்பொறி பறந்தது. அதை பார்த்து சுதாரித்துக் கொண்ட தாயும், மகனும் ஸ்கூட்டரில் இருந்து குதித்து விட்டனர். அதைத்தொடர்ந்து ஸ்கூட்டர் சாலையோர கழிவுநீர் கால்வாய் மீது விழுந்தது. அறுந்து விழுந்த மின் கம்பி தொடர்ந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. தாயும், மகனும் ஸ்கூட்டரில் இருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே மின் கம்பி அறுந்து கிடந்ததால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். அதன்பிறகு சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. பின்னர் போக்குவரத்து சீரானது. மேலும் அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்யும் பணியும் நடந்தது.
மின் கம்பி அறுந்து விழுவதற்கு காரணமான டெம்போ நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் அந்த டெம்போவை வடசேரி போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.