விசைத்தறி உரிமையாளர் மரத்தில் ஏறி போராட்டம்
பள்ளிபாளையத்தில் கடன் தொல்லையால் மரத்தில் ஏறி விசைத்தறி உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பள்ளிபாளையம்
விசைத்தறி உரிமையாளர்
பள்ளிபாளையம் ஓம் சக்தி கோவில் அருகே வசித்து வருபவர் பழனிச்சாமி என்கிற மணி (வயது 58). இவர் விசைத்தறிகூடம் வைத்து தொழில் நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட்டாளியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு தொழிலில் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. தன்னை தனது கூட்டாளிகள் ஏமாற்றியதாக கூறி வந்துள்ளார்.
மேலும் இவர் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து உள்ளனர். இந்நிலையில் மணி மனம் உடைந்து காணப்பட்டார்.
மரத்தில் ஏறி போராட்டம்
நேற்று பள்ளிபாளையம் காவிரி கரையோரம் விநாயகர் கோவில் அருகில் உள்ள அரசமரத்தில் திடீரென ஏறி மணி போராட்டம் நடத்தினார். அப்போது தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் மரத்தில் இருந்து குதித்துவிடுவேன் என அவர் கூறினார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பள்ளிபாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.