பெண் பக்தர்கள் மீது நின்று அருள்வாக்கு கூறிய சாமியார்
ஒடுகத்தூர் அருகே நடந்த கோவில் திருவிழாவில் பெண்பக்தர்கள் மீது நின்று சாமியார் அருள் வாக்கு கூறினார்.
கோவில் திருவிழா
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்கு நடுவே தீர்த்தம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காட்டு காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் கொண்டாடப்படும் வன காட்டு காளியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
முன்னதாக, ஊர் மக்கள் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, குளக்கரையில் இருந்து அம்மனின் கிரீடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து எடுத்து வந்து வன காட்டு காளியம்மனுக்கு வைத்து வழிபட்டனர்.
பக்தர்கள் மீது நின்று
அப்போது, வழி நெடுகிலும் குழந்தை வரம், திருமணம் வேண்டி பெண் பக்தர்கள் தரையில் படுத்திருந்தனர். அவர்கள் மீது ஏறி நின்று சாமியார் அருள் வாக்கு கூறினார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வன காட்டு காளியம்மனை பக்தியுடன் வேண்டி விரதம் இருந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். அதேபோல், குழந்தை இல்லாதோர் இங்குள்ள மூங்கில் மரத்தில் தொட்டில் கட்டி மடி ஏந்தி மனமுருக வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று கூறுகின்றனர். இதனால், நேற்று நடந்த திருவிழாவில் சாமியார் வந்த போது ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடி ஏந்தி வேண்டிக் கொண்டன.