வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில்லை
தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில்லை என தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் அசுத்தம் கலந்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது இழிவான செயல். தமிழ்நாட்டிற்கு பெரும் தலைக்குனிவும், வெட்கக்கேடும் ஆகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு லால்குடி அருகே திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையை போல இங்கும் நடந்துள்ளது வேதனைக்குரியது. சாதிய தீண்டாமை இன்னும் இருக்கிறது என்பதனை இது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
விசாரணை குழு
அந்த கிராமத்தில் கோவிலுக்கு சென்று பட்டியலின மக்கள் வழிபடவும், அங்கு சாமியாடிய பெண் பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியதால் அவரையும், டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்தவரையும் கலெக்டர் கவிதாராமு, போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆகியோர் கைது செய்த நடவடிக்கை மேற்கொண்டது பாராட்டுக்குரியது. இதற்காக அமைக்கப்பட்ட விசாரணை குழுவினர் நேர்மையாக செயல்பட வேண்டும்.
அதிகாரிகள் அலட்சியம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகம் காணப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் பல இடங்களில் சாதிய வன்கொடுமைகள் காணப்படுகிறது. இதற்கு காரணம் மத்திய அரசின் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது தான். அரசு நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டினாலும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கும் போது இக்கோரிக்கைகளை வலியுறுத்துவேன். இந்த சம்பவத்தில் பா.ஜ.க. மற்றும் சங்பரிவார அமைப்புகள் ஏன் குரல் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "அரசு ஒப்பந்தம், குத்தகைகள் விடுவதில் பட்டியலின மக்களும் குத்தகை எடுக்கும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர சட்டசபையில் எங்கள் கட்சி சார்பில் தனி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். தமிழகம் பெரியார் மண் என்றாலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என்பது உண்மை தான். இதற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியம் தான். தி.மு.க.வுடன் கூட்டணியில் எங்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை. எங்களது கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது வேறு' என்றார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பாவாணன், சசிகலைவேந்தன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.