கோவில்பட்டி மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் வாழைத்தார் விலை 'கிடுகிடு' என உயர்வு
கோவில்பட்டி மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் வாழைத்தார் விலை ‘கிடுகிடு’ என உயர்த்தி விற்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் வாழைத்தார் விலை 'கிடுகிடு' என உயர்ந்துள்ளது.
வாழைத்தார்கள்
கோவில்பட்டி மார்க்கெட்டில் உள்ள ஏலக்கமிஷன் கடைகளுக்கு தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் இருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தினமும் ஏராளமான லாரி, வேன்கள், லோடு ஆட்டோக்களில் வாழைத்தார்கள் கொண்டு வரப்படுவது வாடிக்கை.
இந்த வாழைத்தார்களை மார்க்கெட்டிலுள்ள கமிஷன் கடைகளில் வைத்து வியாபாரிகள், சிறிய கடைக்காரர்கள், தள்ளுவண்டி விற்பனையாளர்கள் முன்னிலையில் ஏலம் விடுவார்கள். அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து செல்வர். அதிகாலையில் தொடங்கும் ஏலம் மதியத்திற்குள் முடிக்கப்படும்.
வரத்து குறைவு
இந்த மார்க்கெட்டுக்கு கற்பூரவல்லி, பூவன், ரஸ்தாலி, கோழிக்கூடு, செவ்வாழை, நேத்திரம், நாட்டு வாழை உள்ளிட்ட பல்வேறு ரக வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படும்.
நேற்று மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் வாழைத்தார்களின் விலை கிடுகிடுவென உயர்த்தி விற்கப்பட்டன.
விலை கிடுகிடு உயர்வு
இந்த வகையில் கடந்த வாரம் கற்பூரவல்லி வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையானது. நேற்று இந்த வாழைத்தார் ரூ.800 முதல் ரூ.1000 வரை உயர்ந்தது. இதேபோல கடந்த வாரம் ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனையான கோழிக்கூடு வாழைத்தார் நேற்று ரூ.500 முதல் ரூ.700 வரை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரம் ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையான செவ்வாழை நேற்று ரூ.800 முதல் ரூ.1,500 வரை ஏலம் போனது. கடந்த வாரம் வரை ரோபஸ்டா வாழை தார் ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனையானது. நேற்று இந்த வாழைத்தார் ரூ. 700 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. வரும் நாட்களில் மேலும் வரத்து குறையும் பட்சத்தில் வாழைத்தார் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.