பூக்களின் விலை கிடு கிடு உயர்வு
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கரூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.
பூ மார்க்கெட்
கரூர் ரெயில்வே ஜங்சன் அருகே மாரியம்மன் பூ மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. பூக்களை விவசாயிகள் நேரடியாக இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்று செல்கின்றனர். இந்த பூ மார்க்கெட்டிற்கு மாயனூர், மலைப்பட்டி, கருப்பூர், லந்தக்கோட்டை, செக்கணம்,தளவாய்பாளையம், கூடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பூக்களை பறித்து கொண்டு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் மல்லிகை, முல்லை, அரளி, ஜாதிப்பூ உள்ளிட்ட பூக்களை இங்கிருந்து வியாபாரிகள், பூக்கட்டும் பெண்கள் உள்ளிட்டோர் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
விலை உயர்வு
ஒரு கிலோ எடை கொண்ட மல்லிகை பூ ரூ.500 முதல் ரூ.600-க்கும், முல்லை பூ ரூ.400-க்கும், அரளி பூ ரூ.200-க்கும், செவந்தி பூ ரூ.250 முதல் ரூ.300-க்கும், ரோஜா பூ ரூ.100 முதல் ரூ.120-க்கும், மருவு 4 கட்டு ரூ.100-க்கும், மரிக்கொழுந்து 4 கட்டு ரூ.120-க்கும் விற்பனையானது. நேற்றைய விலையை விட கடந்த வாரம் பூக்களின் விலை குறைந்தே காணப்பட்டது. மல்லிகை பூ ரூ.300-க்கும், முல்லை பூ ரூ.200-க்கும், அரளி ரூ.80-க்கும் விற்பனையானது. ஆனால் இன்று (புதன்கிழமை) பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.