பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
ஓணம் பண்டிகை-திருமண முகூர்த்தம் எதிரொலியாக திண்டுக்கல், நிலக்கோட்டையில் பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை ரூ.1,100-க்கு விற்பனை ஆனது.
ஓணம் பண்டிகை
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகையை கேரள மக்கள் 10 நாட்கள் கொண்டாடுவார்கள். இதையொட்டி ஒவ்வொரு நாளும் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். இதற்காக திண்டுக்கல்லில் இருந்து கடந்த 2 நாட்களாக அதிக அளவில் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதனால் திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்களின் விலை உயரத்தொடங்கியது. இதற்கிடையே ஆடி மாதம் முடிந்து நேற்று முன்தினம் ஆவணி மாதம் பிறந்தது. இந்த ஆவணி மாதத்தில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆவணி மாதத்தின் முதல் திருமண முகூர்த்தம் ஆகும். அதையடுத்து நாளையும் (திங்கட்கிழமை) திருமண முகூர்த்தம் வருகிறது.
பூக்கள் விலை உயர்வு
இதையொட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் குவிந்த உள்ளூர், வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டிப்போட்டு பூக்களை வாங்கினர். இதன் காரணமாக பூக்களின் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்தது.
இதில் நேற்று முன்தினம் கிலோ ரூ.600-க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று ரூ.1,100-க்கு விற்பனை ஆனது. அதேபோல் கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.500-க்கும், காக்கரட்டான் ரூ.450-க்கும், முல்லைப்பூ ரூ.420-க்கும், சாதிப்பூ ரூ.320-க்கும், பட்டன் ரோஜா ரூ.300-க்கும், செவ்வந்தி மற்றும் அரளி ரூ.200-க்கும், கோழிக்கொண்டைபூ ரூ.80-க்கும், வாடாமல்லி ரூ.40-க்கும், மரிக்கொளுந்து ரூ.100-க்கும், தாமரைப்பூ ஒன்று ரூ.10-க்கும் விற்றது.
நிலக்கோட்டை
இதேபோல் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1,300-க்கும், மல்லிகை ரூ..800-க்கும், வண்ண பிச்சிப்பூ ரூ.400-க்கும், வெள்ளை பிச்சிப்பூ ரூ.500-க்கும், அரளிப்பூ ரூ.200-க்கும், மாட்டுச்செவந்திப்பூ ரூ.70-க்கும், வாடாமல்லி பூ ரூ.70-க்கும், முல்லைப்பூ ரூ.400-க்கும், சம்பங்கி பூ ரூ.550-க்கும், பன்னீர் ரோஸ் பூ ரூ.200-க்கும், கோழிக்கொண்டை பூ ரூ.120-க்கும் விற்பனை ஆனது. பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.