இளநீர் விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்தது
ஆனைமலை பகுதியில் இளநீர் விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்தது. ஒரு டன் ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனைமலை
ஆனைமலை பகுதியில் இளநீர் விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்தது. ஒரு டன் ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இளநீர் அறுவடை
ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஹெக்டரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தேங்காய் விலை தொடர் சரிவை சந்தித்தபோது, இளநீர் அறுவடையில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். ஆனால் கடந்த 2 மாதங்களாக இளநீர் விலையும் சரிவை சந்தித்து வந்தது. இதனால் பாக்கு, ஜாதிக்காய், கோகோ, வாழை உள்ளிட்ட ஊடுபயிர்களை பயிரிட்டு வருவாய் ஈட்டினர்.
மேலும் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் இருந்து கடந்த 2 மாதங்களாக தினமும் 5 லட்சம் இளநீர் ரூ.16 முதல் ரூ.17 வரை கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் டெல்லி, அரியானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
விலை உயர்ந்தது
இந்த நிலையில் பருவ நிலை மாற்றம், நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் இளநீர் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தினமும் 3 லட்சம் இளநீர் மட்டுமே வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து இளநீர் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறுகையில், தற்போது வெளிமாநிலங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் இளநீர் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து வருகிறது. நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீரின் விலை ரூ.22 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு டன் இளநீரின் விலை ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.7 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்படு உள்ளது என்றார்.