இஞ்சி விலை கடும் உயர்வு
தூத்துக்குடியில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது/
தூத்துக்குடியில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
இஞ்சி
தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அதன்படி மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து தூத்துக்குடிக்கு இஞ்சி கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்பு கேரளாவில் இருந்தும் இஞ்சி விற்பனைக்காக வந்தது.
சமீபகாலமாக கேரளாவில் இருந்து வருவது நின்று விட்டதால், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து அதிக அளவில் இஞ்சி வந்து கொண்டு இருந்தது.
விலை உயர்வு
கடந்த வாரம் பெய்த கோடை மழை காரணமாக இஞ்சி வரத்து குறையத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் விலை படிப்படியாக உயரத் தொடங்கி உள்ளது.
நேற்று 1 கிலோ இஞ்சி ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.240-க்கு விற்பனையானது.
இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறும் போது, தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு இஞ்சி வரத்து குறைந்து உள்ளது. கடந்த வாரத்தில் ரூ.160-க்கு விற்பனையான இஞ்சி இன்று (அதாவது நேற்று) ரூ.220-க்கு விற்பனையானது. இதேபோன்று கடந்த வாரம் ரூ.30-க்கு விற்பனையான கத்தரிக்காய் ரூ.80-க்கு விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் இஞ்சி விற்பனையாகும்.
ஆனால் நேற்று இஞ்சி விற்பனை மந்தமாக உள்ளது. விலை உயர்வால் பொதுமக்கள் இஞ்சி வாங்குவதை தவிர்த்து வருகின்றனர் என்று கூறினார்.