அன்னாசி பழம் விலை 'கிடு கிடு' உயர்வு


அன்னாசி பழம் விலை கிடு கிடு உயர்வு
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அன்னாசி பழத்தின் விலை திடீரென கிடு கிடுவென உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

அன்னாசி பழத்தின் விலை திடீரென கிடு கிடுவென உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரட்டை லாபம் ஊடுபயிர்

குமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களில் முன்பு ஊடுபயிராக வாழைகள் அதிக அளவில் பயிருட்டு வந்தன. ஆனால் இன்றைக்கு ரப்பர் தோட்டத்தில் ஊடுபயிரின் இடத்தை அன்னாசி செடிகள் பிடித்து விட்டன. ரப்பர் மரத்தை 25 ஆண்டுகள் வளர்த்து விட்டு அதை முறித்து புதிய ரப்பர் செடிகள் தோட்டங்களில் நடுவார்கள். ரப்பர் மரமாகி பால்வெட்டுவதற்கு 7 ஆண்டுகள் ஆகும்.

இந்த இடைப்பட்ட காலங்களில் ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராக அன்னாசியை பயிரிட குத்தகைக்கு வழங்குவார்கள். குத்தகைப்பணம் மற்றும் ரப்பர் செடிகள் பராமரிப்பு இலவசமாக கிடைப்பது என தோட்ட உரிமையாளருக்கு இரட்டை லாபம் கிடைக்கிறது.

2 ஆண்டில் 30 டன்

அன்னாசியை பொறுத்தவரை குறுகிய காலத்திலேயே பலன் தரும் பயிராகும். ஒரு ஏக்கர் நிலத்தில் அன்னாசி பயிரிட ரூ.1½ லட்சம் வரை செலவாகும். நடவு செய்த ஒரு ஆண்டில் காய் நன்கு பழமாகும் தருவாய் வந்ததும் காய்களை பறித்து சந்தையில் விற்கலாம்.

இப்போது மார்க்கெட்டில் அன்னாசி பழத்தின் தேவை அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் வியாபாரிகள் தோட்டத்துக்கு வந்தே அன்னாசி பழங்களை கொள்முதல் செய்து செல்கிறார்கள். இரண்டு ஆண்டில் ஒரு ஏக்கர் நிலத்தில் 30 டன் அன்னாசி கிடைக்கும். கடந்த ஆண்டு தொடங்கத்தில் ரூ.20-க்கும் கீழ் அன்னாசி பழத்தின் விலை இருந்தது. இப்போது கிலோவுக்கு ரூ.53-க்கும் விற்பனையாகிறது.

இதுகுறித்து அருவிக்கரையை சேர்ந்த அன்னாசி விவசாயி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கடைகளில் ரூ.60 முதல்

கடந்த 10 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் அன்னாசி பழங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. பத்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு மேல் குமரி மாவட்டத்தில் அன்னாசி சாகுபடி நடக்கிறது. இங்கிருந்து சென்னை, விஜயவாடா, பெங்களூரு, மராட்டியம் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் அன்னாசி பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஒரு அன்னாசி பழம் அரை கிலோவில் இருந்து 2½ கிலோ வரை சராசரி எடை கொண்டதாக இருக்கும். தற்போது அன்னாசிபழம் கிலோவிற்கு ரூ.53 மார்க்கெட் விலை உள்ளது. பச்சை காய் என்றால் ரூ.46-க்கு விலை போகிறது. எங்களிடம் இருந்து அன்னாசி பழம் வாங்கும் வியாபாரிகள் ஏ, பி, சி என அன்னாசியின் அளவை கணக்கிட்டு தரம் பிரிக்கிறார்கள். இதனால் கடைகளில் தற்போது கிலோவிற்கு ரூ.60 முதல் 80-க்கும் மேல் விலை கொடுத்து பொதுமக்கள் வாங்க வேண்டியிருக்கும்.

தேவை அதிகரிப்பு

கொரோனா காலத்தில் ரப்பர் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இப்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.

தற்போது கோடைகாலம் என்பதால் மக்கள் சுற்றுலா தலங்களை நோக்கி படையெத்த வண்ணம் உள்ளனர். இதனால் அவர்கள் அன்னாசி பழங்களை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆகவே, அன்னாசி பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இப்போது நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் தோட்டங்களுக்கே வந்து அன்னாசி பழத்தை கொள்முதல் செய்து வாங்கி செல்கிறார்கள். நாளுக்கு நாள் குமரி மாவட்டத்தில் அன்னாசிப்பழ சாகுபடி செய்யும் நிலப்பரப்பும் அதிகரித்து வருகிறது என்றார்.

தற்போது, அன்னாசி பழத்துக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story