சின்ன வெங்காயம் விலை 'கிடுகிடு' உயர்வு
மழை காரணமாக வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகர்கோவில்:
மழை காரணமாக வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
விலை உயர்வு
வீட்டில் தினசரி சமையலில் சின்ன வெங்காயத்துக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் குழம்பு சுவையாக அமைய சின்ன வெங்காயத்தை இல்லத்தரசிகள் அதிகளவில் பயன்படுத்துவார்கள். இதனாலேயே அனைத்து வீட்டு சமையல் அறைகளில் எப்போதும் சின்ன வெங்காயம் இருக்கும்.
ஆனால் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. அதிலும் குமரி மாவட்டத்தில் வழக்கமாக ரூ.60 -க்கு விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம் கிடு கிடுவென உயர்ந்து நேற்று ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொதுமக்கள் கவலை
குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள வடசேரி கனகமூலம் சந்தை, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், மார்த்தாண்டம், தக்கலை, களியக்காவிளை ஆகிய இடங்களில் முக்கிய சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வடசேரி கனகமூலம் சந்தையில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு சிறு சந்தைகளுக்கு காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் கனகமூலம் சந்தையில் சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். அதுவே கோட்டார் மார்க்கெட்டில் மொத்த விற்பனை நடைபெறுவதால் அங்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.85-க்கு விற்கப்படுகிறது.
இதே போல தக்காளி விலையும் 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை உயர்ந்து இருக்கிறது. அதாவது ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி ரூ.25-ல் இருந்து ரூ.30 வரை விற்கப்படுகிறது.
வரத்து குறைவு
சின்ன வெங்காயம் விலை ஏற்றம் குறித்து சந்தை வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, "வடசேரி கனகமூலம் சந்தைக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் மதுரை மற்றும் சில இடங்களில் இருந்தும் வருகிறது. ஆனால் தற்போது மழை பெய்து வருவதால் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக வரத்து குறைந்ததால் அதன் விலை உயர்ந்து விட்டது. மழை ஓயும் வரை சின்ன வெங்காயம் விலை உயர்ந்தபடியே இருக்கும்" என்றார்.
வடசேரி சந்தையில் காய்கறிகளின் நேற்றைய விலை (ஒரு கிலோ) நிலவரம் வருமாறு:-
கத்தரிக்காய்-ரூ.40, பீன்ஸ்-ரூ.75, கேரட்-ரூ.60, முட்டைக்கோஸ்-ரூ.35, சேனைக்கிழங்கு-ரூ.30, பீட்ரூட்-ரூ.50, வெண்டைக்காய்-ரூ.25 முதல் ரூ.30 வரை, வெள்ளரிக்காய்-ரூ.10, இஞ்சி-ரூ.80, முருங்கைக்காய்-ரூ.60, புடலங்காய்-ரூ.25, தடியங்காய்-ரூ.15, சுரக்காய்-ரூ.25, பூசணிக்காய்-ரூ.10, சவ்சவ்-ரூ.25, முள்ளங்கி-ரூ.25, சாம்பார் மிளகாய்-ரூ.50, மாங்காய்-ரூ.50, பெரிய வெங்காயம்-ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.