கொடைக்கானலில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு


கொடைக்கானலில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 26 Jun 2023 2:30 AM IST (Updated: 26 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பீட்ரூட், கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, நூல்கோல், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளை விவசாயிகள் பறித்து, கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை ேதாறும் நடைபெறும் வாரச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். அதேபோல் தரை பகுதிகளில் இருந்தும் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.

கொடைக்கானல் வாரச்சந்தையில் கடந்த 2 மாதங்களாக சீரான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி, தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. அதேபோல் சின்ன வெங்காயம் முதல் தரம் ரூ.90, பச்சை கத்திரிக்காய் ரூ.120, பாகற்காய் ரூ.120, கீரை வகைகள் ரூ.20-க்கு அதிகமாக விற்கப்படுகிறது. மேலும் மலைப்பகுதிகளில் விளையும் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்தது. இதனால் அவற்றை வாங்க வந்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்க வந்த அவர்கள், விலை பல மடங்கு அதிகரித்ததால் சிறிதளவு காய்கறிகளை வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தரைப்பகுதிகளில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் தக்காளி, கத்திரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வரும் வாரங்களில் இந்த விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், கடைகள், சந்தைகளில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. எனவே தமிழக அரசு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய முன்வர வேண்டும். கொடைக்கானலில் உள்ள உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story