மேலும் ஒரு பெண் புகார் எதிரொலி:பாதிரியாரை மீண்டும் காவலில் எடுத்துபோலீசார் விசாரணை


மேலும் ஒரு பெண் புகார் எதிரொலி:பாதிரியாரை மீண்டும் காவலில் எடுத்துபோலீசார் விசாரணை
x

பாலியல் புகாரில் கைதான பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்ததால் அவரை போலீசார் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பாலியல் புகாரில் கைதான பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்ததால் அவரை போலீசார் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆபாச புகைப்படங்கள்

கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது29). பாதிரியாரான இவர், இளம் பெண்களுடன் இருக்கும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் பேச்சிப்பாறையைச் சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் முதலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.

பெண் புகார்

இதற்கிடையே வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை ஒரு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பாலியல் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், 'கடந்த 2022-ம் ஆண்டு பாதிரியாருடன் நான் வாட்ஸ்-அப் மூலம் சாட்டிங் செய்தேன். அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் நான் ஒதுங்கிக் கொண்டேன். ஆனாலும் அவர் எனக்கு தொல்லை கொடுத்தார்' என்று கூறியுள்ளார். அந்த புகார் தொடர்பாகவும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரி நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

காவலில் எடுத்து விசாரணை

இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று நடந்தது. இதற்காக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த கோர்ட்டு, பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story