பரந்தூர் விமானநிலையத்துக்கு அனுமதி அளிக்க பிரதமர் துணை போவதை கைவிட வேண்டும் -பி.ஆர்.பாண்டியன் பேட்டி
பரந்தூர் விமானநிலையத்துக்கு அனுமதி அளிக்க பிரதமர் மோடி துணை போவதை கைவிட வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி.
சென்னை,
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பருவநிலை மாற்றத்திற்கு காடுகளின் பரப்பளவை கூட்டுவதற்கும், நீர் நிலைகளை பாதுகாப்பதற்கும் உலகளாவிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் பருவநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாப்பதற்கு உயர்மட்டக்குழு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பரந்தூர் விமானநிலையம் அமைக்க அரக்கோணம் விமானப்படை அனுமதி மறுப்பதாகவும், பரந்தூர் முதல் அரக்கோணம் வரை உள்ள மிகப்பெரும் காடுகளை அழிக்க மத்திய அரசின் வனத்துறை அனுமதி மறுப்பதாகவும், பிரதமர் தலையிட்டு அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடிதம் மூலம் வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாவது அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும், அரக்கோணம் விமானப்படை தளத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்தாலும் பரவாயில்லை, பரந்தூர் விமானநிலையம் அமைக்கவேண்டும் என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. எனவே, பிரதமர் மோடி பரந்தூர் விமானநிலையத்துக்கு அனுமதி அளிக்க துணை போவதை கைவிடவேண்டும்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான ராட்சத லாரிகள் மூலம் கனிமவளம் கேரளாவுக்கு கடத்தப்படுவது வன்மையாகக்கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.