கைதியின் தற்கொலை முயற்சிக்கு உதவிய சிறைக்காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்


கைதியின் தற்கொலை முயற்சிக்கு உதவிய சிறைக்காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
x

மதுரை சிறையில் கைதியின் தற்கொலை முயற்சிக்கு உதவிய சிறைக்காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுரை,

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது உசைன் (வயது 29). இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், மதுரை சமயநல்லூரில் நடந்த திருட்டு வழக்கிலும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வாடிப்பட்டி கோர்ட்டு உத்தரவின்பேரில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த மாதம் முகமது உசேன் சிறையில் டியூப்லைட் மற்றும் பல்புகளை உடைத்து உடலில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை தனி அறையில் அடைத்து சிறை காவலர்கள் எச்சரிக்கையுடன் கண்காணித்து வந்தனர். ஆனாலும் கடந்த 27-ந்தேதி திடீரென்று முகமது உசேன் உடல் முழுவதும் பிளேடால் கீறி மீண்டும் தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த காவலர்கள் அவரை சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பிளேடு கிடைத்தது எப்படி?

இவ்வளவு பாதுகாப்பாக இருந்தும் முகமது உசேனுக்கு எப்படி பிளேடு கிடைத்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து அங்கு பணியில் இருந்த சிறைக்காவலர்களிடம் சிறை நிர்வாகம் விசாரணை நடத்தியது. அதில் பல்வேறு தகவல் கிடைத்தன.

ஏற்கனவே நடந்த தற்கொலை முயற்சிக்கு பின்னர், சிகிச்சை முடிந்து அவர் சிறைக்கு வந்ததும் அவரை சோதனை செய்து புதிய துணிமணிகள் கொடுத்து தனிஅறையில் அடைத்தனர்.

சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக்காவலர் செல்வகுமார் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவருக்கு பதிலாக காவலர் சின்னச்சாமி சிறிது நேரம் பாதுகாப்பிற்காக வந்துள்ளார். சாப்பிட்டு விட்டு செல்வகுமார் வந்த சில நிமிடத்தில்தான் முகமதுஉசேன் பிளேடால் உடலை கீறிக்கொண்டுள்ளார்.

சிறைக்காவலர் வாக்குமூலம்

இதுதொடர்பாக முகமது உசேனிடம் நடத்திய தீவிர விசாரணையில், மாற்று காவலராக பணிக்கு வந்த சின்னச்சாமிதான் தனக்கு பிளேடு கொடுத்ததாகவும், வேறு ஒருவர் பணியில் இருக்கும் போது நீ தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று சின்னசாமி கூறி இருந்ததால், அவர், அங்கிருந்து சென்ற பிறகு, தற்கொலைக்கு முயன்றதாகவும் முகமது உசேன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பணியிடை நீக்கம்

அதனை தொடர்ந்து சிறை கைதியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகவும், உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடும்படி கைதியை தூண்டியதாகவும் எழுந்த புகாரில், காவலர் சின்னச்சாமியை பணியிடை நீக்கம் செய்து மதுரை மத்திய சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் காவலர் சின்னசாமி, ஏன் அவரை தற்கொலைக்கு தூண்டி பிளேடு கொடுத்தார்? என்பது குறித்து சிறை நிர்வாகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடும் முகமது உசேனை வேறு மத்திய சிறைக்கு மாற்ற சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


Next Story