போலீஸ்காரரை தாக்கிவிட்டு கைதி தப்பிக்க முயற்சி


போலீஸ்காரரை தாக்கிவிட்டு கைதி தப்பிக்க முயற்சி
x

வேலூர் ஜெயில் வளாகத்தில் போலீஸ்காரரை தாக்கிவிட்டு கைதி தப்பிக்க முயற்சி செய்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்

வேலூர் ஜெயில் வளாகத்தில் போலீஸ்காரரை தாக்கிவிட்டு கைதி தப்பிக்க முயற்சி செய்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தண்டனை கைதி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் மாதப்பன் என்ற மாதேஷ் (வயது 25). இவர் மீது திருட்டு, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் உள்ளது. ஒரு வழக்கில் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது உள்ள குற்ற வழக்கு தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு வேலூர் ஜெயிலில் இருந்து அவரை நேற்று முன்தினம் போலீசார் அழைத்துச் சென்றனர். வேலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் பென்னாத்தூரை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர் உடன் சென்றார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மாதேஷை போலீசார் மீண்டும் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வந்தனர். ஜெயிலில் அடைப்பதற்கு முன்பு ஜெயில் வளாகப்பகுதியில் போலீசார் மற்றும் மாதேஷ் காத்திருந்தனர்.

போலீஸ்காரர் மீது தாக்குதல்

நள்ளிரவு 12 மணி அளவில் மாதேஷ் தனக்கு சிறுநீர் வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீஸ்காரர் சுரேஷ் அங்குள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு அழைத்துச் சென்றார். சிறுநீர் கழித்த பின்னர் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்த மாதேஷ் திடீரென சுரேஷின் கழுத்து மற்றும் கைகளில் குத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அங்கிருந்து தப்பியோடவும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதைப்பார்த்த அங்கிருந்த சக போலீசார் ஓடிவந்து மாதேஷை சுற்றிவளைத்து பிடித்தனர், பின்னர் ஜெயிலில் அடைத்தனர். காயமடைந்த போலீஸ்காரர் சுரேஷ் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சென்று சுரேஷிடம் நடந்ததை கேட்டு, நலம் விசாரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

செல்போன் கேட்டு...

கைதி மாதேஷை போலீசார் தேன்கனிக்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மாதேஷ், போலீஸ்காரர் சுரேஷிடம் செல்போன் கேட்டுள்ளார். தனது தம்பியிடம் பேசிவிட்டு தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் சுரேஷ் செல்போன் கொடுக்கவில்லை. இதனால் அவர் மீது ஆத்திரத்தில் மாதேஷ் இருந்துள்ளார்.

வேலூர் வந்தபின்னர் ஜெயில் வளாகத்தில் சிறுநீர் கழிக்கும்போது, மீண்டும் செல்போன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாதேஷ், சுரேஷின் காலை பிடிப்பதுபோன்று திடீரென கையில் கிடைத்த இரும்பு கம்பியை கொண்டு தாக்கி உள்ளார். மேலும் ஆபாசமாக பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றிய புகாரின்பேரில் மாதேஷ் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயிலில் இருந்து தப்பிப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story