கோர்ட்டில் விசாரணைக்கு வந்த கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு


கோர்ட்டில் விசாரணைக்கு வந்த கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு
x

அம்பை கோர்ட்டில் விசாரணைக்கு வந்த கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

சேர்வலாறு காலனி தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் மாடசாமி (வயது 29). இவர் அப்பகுதியில் ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து ஒரு பெண்ணை கற்பழிக்க முயன்றதாக அந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அம்பை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர். பின்னர் இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று சிறையில் இருந்து அம்பை கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக வந்தார். கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகி விட்டு வெளியே வரும்போது எச்சில் துப்ப போகிறேன் என்று கூறிவிட்டு கோர்ட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதையடுத்து கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீவிரமாக தேடினர். சிறிது நேரத்தில் அம்பை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் மறைந்திருந்த மாடசாமியை மடக்கி பிடித்தனர். கோர்ட்டில் ஆஜராகிய கைதி தப்பி ஓடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story