மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓட்டம்
மணப்பாறையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓடி மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு தலைமறைவானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணப்பாறையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓடி மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு தலைமறைவானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருட்டு வழக்கில் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இந்த சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டு வாகனங்கள் மீட்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொத்தமேட்டுபட்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை வைத்து பொதுமக்கள் 2 பேரை பிடித்தனர். பின்னர் அந்த ஆசாமிகளுக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த மாதவன் (வயது 26), திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று ஆகாஷ் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் கழிவறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கழிவறையில் பார்த்தபோது ஆகாஷ் கழிவறையின் மேல் பகுதியில் இருந்த ஜன்னல் வழியாக தப்பி சென்றது தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளை திருடி...
பின்னர் குமரப்பட்டி கிராமத்திற்கு சென்ற அவர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு தலைமறைவானார். இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, ஆகாஷ் குளித்தலை சாலை வழியாக சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்திலும், மருத்துவ வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய ஆகாஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.