தனியார் நிறுவன ஊழியர் வீட்டை பூட்டி விட்டு மனைவி, குழந்தைகளுடன் மாயம் உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை


தனியார் நிறுவன ஊழியர் வீட்டை பூட்டி விட்டு மனைவி, குழந்தைகளுடன் மாயம் உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை
x

கடனில் மூழ்கிய தனியார் நிறுவன ஊழியர் மனைவி, குழந்தைகளுடன் வீட்டை பூட்டி செல்போனை ‘சுவிட்ச்ஆப்’ செய்து உருக்கமான கடிதத்தை எழுதி வைத்து விட்டு மாயமானார். போலீசார் அவரது வீட்டை திறந்து சோதனையிட்டு விசாரணை செய்தனர்.

திருவண்ணாமலை

தூசி, ஏப்.5-

கடனில் மூழ்கிய தனியார் நிறுவன ஊழியர் மனைவி, குழந்தைகளுடன் வீட்டை பூட்டி செல்போனை 'சுவிட்ச்ஆப்' செய்து உருக்கமான கடிதத்தை எழுதி வைத்து விட்டு மாயமானார். போலீசார் அவரது வீட்டை திறந்து சோதனையிட்டு விசாரணை செய்தனர்.

குடும்பம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 24). இவர் ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி (23). இவர்களுக்கு மோனிஷ் (5) என்ற மகனும் மோனிகா (4) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை செந்தமிழ் செல்வி காஞ்சீபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்த அவரது தந்தை ரவிக்கு போன் செய்துள்ளார். அப்போது அவர் ''எங்களுக்கு கடன் தொல்லை அதிகமாக உள்ளது. நாங்கள் வீட்டை விட்டு செல்கிறோம். எங்களை யாரும் தேட வேண்டாம்'' என்று கூறி போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி தனது மகன் செல்வத்துக்கு தெரிவித்தார். உடனே செல்வம் அப்துல்லாபுரத்தில் உள்ள தங்கை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த அனைவரும் ஆட்டோவில் சென்று விட்டார்கள் என அருகே வசிப்போர் கூறினர்.

இது குறித்து தூசி போலீசில் செல்வம் புகார் செய்தார். இதனை தொடர்ந்து குடும்பத்துடன் மாயமான ராஜசேகர் வீட்டுக்கு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் சென்று வீட்டைத் திறந்து சோதனையிட்டனர்.

உருக்கமான கடிதம்

வீட்டிற்குள் செந்தமிழ் செல்வி தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் ''எங்களுக்கு கடன் தொல்லை அதிகம் உள்ளது. பணம் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அசிங்கமாக உள்ளது. கடன் கொடுத்தவர்களை ஏமாற்றும் நோக்கமும் எங்களுக்கு இல்லை. நிச்சயம் பணத்தை திருப்பி கொடுப்போம். மீண்டும் இந்த இடத்துக்கு வருவோம்'' என்று எழுதப்பட்டு இருந்தது.

சமீபத்தில் ராஜசேகர் ரூ.32 லட்சத்தில் வீடு கட்டி இருந்தார். இதனால் அவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது. கடனை அடைக்க வீட்டை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் வாங்கிய கடன் தொகை அதிகம் இருந்துள்ளது. இதனால் கடனை முழுமையாக அடைக்க முடியாமல் இருந்துள்ளது. எனவே ராஜசேகர் குடும்பத்தினர் வேறு எங்காவது சென்று சம்பாதித்து வந்து கடனை அடைக்கப்போகிறார்களா? அல்லது கடன்காரர்களுக்கு பயந்து வீட்டை விட்டு மாயமானார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story