போராட்டம் நடத்தியவர் கைது
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பெர்டின் ராயன். இவர், நெல்லை மாநகர பகுதியில் உள்ள கட்டிடங்கள் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா?, அனுமதி பெறாத கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து மாநகராட்சியில் அடிக்கடி மனு கொடுத்து வந்தார். மேலும் பல்வேறு சமூகப் பிரச்சினைக்காகவும் இவர் மனு கொடுத்து வந்தார். இவர் கொடுத்த மனுக்களில் பல மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நெல்லை மாநகராட்சிக்கு புகார் மனு கொடுக்க வந்த பெர்டின் ராயன், அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் கொண்டு வந்த புகார் மனுவுக்கு மாலையிட்டு ஈமச்சடங்கு செய்வது போல் செய்துள்ளார். மேலும் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசில் மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெர்டின் ராயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.