காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தென்தாமரைகுளத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.கவுன்சிலர்களும் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.கவுன்சிலர்களும் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் இணைப்பு துண்டிப்பு
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் 6-வது வார்டில் தேர்தல் நேரத்தில் முறைகேடாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் மற்றும் கவுன்சிலர்கள் 6-வது வார்டு பகுதியில் குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்தனர்.
அப்போது தொண்டைமான் காலனி அருகில் ஒரு வீட்டிலும், போலீஸ் நிலையம் அருகில் 2 வீடுகளுக்கும் அனுமதி இல்லாமல் முறைகேடாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த 3 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
முற்றுகை போராட்டம்
இந்தநிலையில் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படும் 3 குடிநீர் இணைப்புகளுக்கும் உரிய தொகையை பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதற்கான ரசீது வழங்கப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்டவர்கள் கூறினர். மேலும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவதிப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று காலையில் அந்த பகுதி மக்களுடன் இணைந்து காலிக்குடங்கள், கால்நடைகளுடன் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டனர். பின்னர், அவர்கள் திடீரென பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியரின் முறைகேடு
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேரூராட்சி ஊழியர் ஒருவர் குடிநீருக்கான தொகையை வாங்கிவிட்டு ரசீது வழங்காமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியது தெரியவந்தது.
அதைதொடர்நது முறைகேட்டில் ஈடுபட்ட பேரூராட்சி அலுவலக ஊழியர் மூர்த்தி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல் அலுவலர் உறுதியளித்தார். மேலும், துண்டிக்கப்பட்ட 3 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகளும் உடனடியாக வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே அந்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
இதற்கிடையே முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதற்கு அபராத தொகை எதுவும் வசூலிக்காமலும், பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாமலும் உடனடியாக மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கிய பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து, பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் தலைமையில் 7 கவுன்சிலர்கள் நேற்று மாலை நாகர்கோவில் பேரூராட்சி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு கொடுத்தனர்.
பேரூராட்சி இயக்குனர் அலுவலகம் உடனடியாக அந்த குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் படி உத்தரவிட்டதாக தெரிகிறது. அந்த உத்தரவின்படி இரண்டு வீடுகளுக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டது. 3-வது வீட்டிற்கு இணைப்பை துண்டிக்க அந்த பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் துண்டிக்கப்படவில்லை.
உள்ளிருப்பு போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த பேரூராட்சி தலைவி, துணைத் தலைவி மற்றும் 6 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இரவு 8 மணி முதல் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 14-வது வார்டு அ.தி.மு.க.கவுன்சிலர் விஜிலா மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இந்தநிலையில் இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரிதுணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் 3-வது வீட்டு குடிநீர் இணைப்பையும் துண்டிக்கவில்லை என்றால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினர். இந்த போராட்டம் நள்ளிரவையும் தாண்டி தொடர்ந்து நடந்தது.
கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதை அறிந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரளாக கூடி நின்றனர்.