ஆக்கிரமிப்பு அகற்ற பேனர் வைத்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து பேனர் வைத்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் இருகரை பகுதியில் சுண்ணாம்புப்பேட்டை, கோபாலபுரம், தாழையாத்தம், நெல்லூர்பேட்டை, பாவோடும்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்த வீடுகள் நீர்வளத் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்து இருந்ததால் ஆக்கிரமித்து கட்டி இருந்த 1,250-க்கும் அதிகமான வீடுகளை கடந்த ஆண்டு நீர்வளத்துறை அதிகாரிகள் அகற்றினார்கள்.
தற்போது இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வெள்ள தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மீண்டும் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பில் உள்ள நூற்றுக்கும் அதிகமான வீடுகளை ஆக்கிரமிப்பு எனக்கூறி அவற்றை அகற்ற நீர்வளத் துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிகாரிகளை முற்றுகை
இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ரமேஷ் உத்தரவின் பேரில், குடியாத்தம் உதவி பொறியாளர் ராஜேஷ் தலைமையில் நீர்வளத்துறை ஊழியர்கள் நேற்று காலையில் மீண்டும் பாவோடும் தோப்பு பகுதியில் ஆக்கிரமப்புகள் அகற்றுவது குறித்து பதாகைகளை கட்டினார்கள்.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பு எனக் கூறி கடந்த ஆண்டு அகற்றப்பட்ட வீடுகளுக்கு பதில் இதுவரை வீடுகள் வழங்கவில்லை. வீட்டு மனைகளும் வழங்கவில்லை. அவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு என குடி இருக்கும் வீடுகளை அகற்றுவது நியாயமா?, முறையாக அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதிக்கப்படும் பொது மக்களுக்கு முதலில் மாற்று ஏற்பாடு செய்துவிட்டு அதன் பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கட்டிய பேனரை அவிழ்த்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.