அடிப்படை வசதிகள் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தாயில்பட்டி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அலுவலகம் முற்றுகை
வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாதாந்திரகூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவள்ளி தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் சண்முகலட்சுமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் செந்தில்வேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அம்பேத்கர் நகர், அண்ணா காலனி, ஆர். சி.தெரு, திருமாநகர், ஒண்டிவீரன் காலனி, பாலம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியும் செய்யவில்லை. புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும். ஊராட்சி செயலாளரை பணிமாற்றம் செய்ய வேண்டும். கடந்த மே தினத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பேச்சுவார்த்தை
ஆனால் இதுகுறித்து இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று பொதுமக்கள் வெற்றிலையூரணி பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது சிலர் சாத்தூரிலிருந்து சிவகாசி சென்ற அரசு பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன், வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், ராமமூர்த்தி, ஜவகர், வெம்பக்கோட்டை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சத்தியமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் ேபாராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.