கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்
செம்பனார்கோவில் அருகே இளையாளூரில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே இளையாளூரில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
செம்பனார்கோவில் அருகே இளையாளூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அரங்கக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் சுக்ரியாபர்வீன் தமிமுன்அன்சாரி தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் குடிநீர் வசதி, சாலை வசதி போன்றவற்றை கவனம் செலுத்தாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்த பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். பின்னர் இளையாளூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மழை பெய்ததால் குடைபிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள் எழுப்பினர்
கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செயல்படுத்துவதில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலை வசதி இல்லாததால் சேற்றில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்ைக எடுக்கவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.