பெருமுகை கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்


பெருமுகை கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்
x

கல்குவாரியை மூட வலியுறுத்தி பெருமுகை பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

வேலூர்

கல்குவாரியை மூட வலியுறுத்தி பெருமுகை பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

கிராமசபை கூட்டம்

தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராமசபை மற்றும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. வேலூரை அடுத்த பெருமுகை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் பெருமுகையில் கிராமசபை கூட்டம் தொடங்கியது. ஊராட்சிமன்ற தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார்.

சிறிதுநேரத்தில் அங்கு வந்த பெருமுகையை சேர்ந்த பொதுமக்கள் கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெருமுகை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் நபர்களை கொண்டு கிராமசபை கூட்டத்தை நடத்துவதாக குற்றம் சாட்டினார்கள்.

பொதுமக்கள் புறக்கணிப்பு

மேலும் பொதுமக்கள் கூறுகையில், காந்தி ஜெயந்தி தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் பெருமுகை அருகே இயங்கி வரும் கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக வெடிகளை வெடிப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. கல்குவாரியால் ஏரிக்கு வரும் நீர் தடைப்பட்டுள்ளது. எனவே கல்குவாரியை மூட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அந்த கல்குவாரி இன்னும் மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறது. முதலில் கடந்தமுறை நடந்த கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான கல்குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுங்கள். அதன்பின்னர் தற்போதைய கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றலாம் என்று கூறினர்.

மேலும் பெருமுகை கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் உள்ளாட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தாசில்தார், அந்த கல்குவாரியை இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்வதாகவும், அதன்பின்னர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையொட்டி முன்எச்சரிக்கையாக சத்துவாச்சாரி போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story