மாசடைந்த தண்ணீரை பாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்த பொதுமக்கள்
ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாசடைந்த தண்ணீரை பாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்த பொதுமக்கள், குடிநீர் வசதி கேட்டு மனு கொடுத்தனர்.
ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாசடைந்த தண்ணீரை பாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்த பொதுமக்கள், குடிநீர் வசதி கேட்டு மனு கொடுத்தனர்.
குடிநீர் வசதி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டா் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நம்பியூர் அருகே பொலவபாளையம் ஊராட்சி ஏகாளிகோவில்மேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆதிதமிழர் பேரவை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் மாசடைந்த தண்ணீரை பாட்டில்களுடன் கொண்டு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-
எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அங்கு ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் கிணற்று தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் கிணற்று தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்படுகிறது. குடிநீர் வேண்டுமென்றால் மேட்டுக்கடை பகுதிக்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று எடுத்து வரவேண்டி உள்ளது. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் எங்கள் பகுதியில் பஸ் நிறுத்தம் கிடையாது. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட பொதுமக்கள் மொட்டணம் அல்லது மேட்டுக்கடை வரை நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே ஏகாளி கோவில் மேடு பகுதியில் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
வடமாநிலத்தவர்கள்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் ஈ.கே.சிலம்பரசன் தலைமையில் கட்சியினர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
ஈரோட்டில் வடமாநிலத்தவர்களை வைத்து வேலை செய்பவர்கள், எத்தனை பேர் வடமாநிலத்தவர்கள் தங்கி உள்ளனர் என்ற விவரங்களை மாதந்தோறும் மாநகராட்சி அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
மதுபாட்டில்கள்
ஈரோடு அருகே நஞ்சை ஊத்துக்குளி சாவடிபாளையம் புதூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மது பாட்டில்களை மாலையாக அணிந்து கொண்டு கோரிக்கை மனு கொடுக்க வந்தார். அவரை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன்பிறகு அவர் உள்ளே சென்று அளித்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
நீலகிரி மாவட்டத்தில் மது பாட்டிலை வாங்கி செல்பவர்கள், மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை தூக்கி எறிவதில்லை. மீண்டும் டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டில்களை வழங்கினால், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படுகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.
தடுப்பணைகள்
அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் கொடுத்த கோரிக்கை மனுவில், "எங்கள் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குழந்தைகளை சேர்த்து உள்ளோம். எல்.கே.ஜி. வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பலர் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் பள்ளிக்கூடத்தை மூடிவிட்டு கல்லூரியாக மாற்றப்படும் என்று சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அறிவித்து உள்ளது. இதனால் எங்களுடைய குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். எனவே அதே பள்ளிக்கூடத்தில் எங்களது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.
தாளவாடி வட்டார விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.மாணிக்கம் தலைமையில் விவசாயிகள் கொடுத்த கோரிக்கை மனுவில், "தாளவாடியில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு நீர்வளத்தை மேம்படுத்த பல்வேறு இடங்களில் 20 அடி உயரத்தில் தடுப்பணைகள் கட்டி கொடுக்க வேண்டும்.", என்று கூறிஇருந்தனர்.
ஊராட்சி தலைவர் மீது புகார்
தாளவாடி அருகே அருள்வாடி கிராமத்தை சேர்ந்த சிவண்ணா என்பவர் கொடுத்த மனுவில், 'நில மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதேபோல் பஸ் வசதி கேட்டும், சமுதாயக்கூடம் கட்டித்தர கோரியும் தாளவாடி பாரதிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தார்கள்.
இந்த கூட்டத்தில் உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 218 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.